
14
காவலர்கள் எல்லோரும் அன்று பாதுகாப்பாய் உணர்ந்தார்கள். காலைப் பிடித்துக் கெஞ்சி, பெரியவரைச் (பெரிய ரௌடியைச்) சிறையில் சில நாள்கள் இருக்கச் சம்மதிக்க வைத்த எஸ்.பி. மீது டிஜிபிக்கும் அளவில்லா மரியாதை. சொன்னபடி பெரியவர் நடந்துகொண்டதால், பெரியவர் கேட்ட வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டிய கடமை காவலர்கள் மேல் விழுந்தது. சாதத்தில் ஒரு கறுப்பு சோறு கிடந்தாலும் வெட்டத் துள்ளும் ஏழெட்டுக் கொலை செய்த ரெüடிகள் எல்லாம்கூட பெரியவர் உள்ளே இருப்பது தெரிந்ததும் சத்தம்போடாமல் அடங்கிப்போனது ஆச்சரியம்தான். அன்றிரவு சரியாகப் பத்தரை மணி. சிறையின் ஒவ்வொரு கதவின் முன்னாலும் நூறு ரூபாய்த் தாளை நீட்டியவாறே ஒரு கரம் வந்தது. 'சல்யூட்' அடித்தபிறகே தாளைப் பெற்றுகொண்டு கதவுகளும் நேர்மையை நிலைநாட்டின. இறுதியாகப் பெரியவர் அறையில் தாளெதுவும் நீட்டாமல் அந்தக் கரம் நுழைந்தபோது அவருக்குத் தாங்க முடியாத சந்தோஷம். படுக்கும் முன் வீட்டில் விசாரிப்பதுபோல குழந்தைகளைப் பற்றியெல்லாம் நிதானமாக விசாரித்து முடித்து, அந்தக் கரத்திற்குப் பெரியவர் வழக்கம்போல் முத்தமிட்டுத் தொடங்கினார். முனகல் சத்தங்களை அறிந்திராத அங்கிருந்த சுவர் பல்லிகள் ஒருவித நடுக்கத்தோடே இரவு முழுவதும் அலைந்துகொண்டிருந்தன. விடியலுக்குப் பிறகு அறையிலிருந்து வெளியே வந்த அந்தக் கரம், அன்றிரவும் சொல்லியவாறு குரும்பாட்டுக் குழம்போடு வந்து கதவுகளைத் திறந்தது.
2 comments:
nalla karpanai.
vaazhthukkal.
mullaiamuthan.
kaatruveli-ithazh.blogspot.com
thank u
Post a Comment