Monday, February 7, 2011

வெளியேற்றம்



11


வெண்ணிற மேகத்தை இரண்டு கைகளாலும் பறித்து வந்து அவனும் அவளும் வீட்டிற்குள் விட்டார்கள். கலைந்துபோகும் என்று அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக வீட்டுக் கூரையையே வானமாக்கிக்கொண்டு மேகம் அலைய ஆரம்பித்தது. வெளியேறிவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் வாசற் கதவு, சன்னல்கள் என வீட்டிலிருந்த அனைத்துத் திறப்புகளையும் அடைத்தார்கள். பிரபஞ்ச வலமாக முன்னறை, படிப்பறை, படுக்கையறை, சமையலறை என நான்கு அறைகளுக்குளேயே மேகம் மாறிமாறி இரவு பகலாகச் சுற்றி வந்தது. தெருவிற்குப் போக வேண்டிய அவசியத்தில் வாசற் கதவைக் கீறலாய்த் திறந்து ஓர் எலியைப் போல நுழைந்து போய்வர பழகிக்கொண்டார்கள். எதேச்சையாய் ஒரு நாள் வான் மேகத்தில் ஏற்படும் மாற்றங்கள் வீட்டிலுள்ள மேகத்திலும் ஏற்படுவதைக்
கவனித்தபோது அவர்களுக்குப் பெரும் வியப்பாக இருந்தது. பல முறை சலிப்பு தட்டாமல் தெருவிற்கும் வீட்டிற்குமாகப் போய்வந்து இரு மேகங்களையும் ஒத்துப் பார்த்தார்கள். மாற்றம் எதையும் கண்டறிய முடியாத சந்தோஷக் களைப்பிலேயே அன்றிரவு அயர்ந்து தூங்கினார்கள். அதிகாலையில் திடீரென வீட்டிற்குள் கன மழை கொட்டியது. முழுதாய் நனைந்து அவர்கள் எழுந்தபோது எல்லாப் பொருள்களுமே நனைந்து வீடே வெள்ளத்தில்
மிதப்பதைப் போலக் காட்சியளித்தது. எல்லையில்லா மகிழ்ச்சியில் கட்டிக்கொண்டு குதித்தவர்கள் அடுத்தடுத்த நாட்களில் மழை கொட்டியபோதும் மேக வெளியேற கதவையோ, சன்னல்களையோ திறக்காமல் வீட்டிற்குள்ளேயே குடைபிடித்து உட்கார்ந்து சமாளித்தார்கள். ஆனால் மற்றொரு நாள் புயல் வீசியபோது அவர்களால் எதையுமே தடுத்துக் கொண்டிருக்க முடியவில்லை.