Thursday, June 25, 2009

டோரா, புஜ்ஜி, குழந்தைகள், அம்மாக்கள்

மதியம் 12.30 மணிக்கு
டிவிக்குள்ளிலிருந்தவாறே புஜ்ஜியோடு டோரா
வீட்டிலிருக்கும் எல்லாக் குழந்தைகளையும் கைதட்டி அழைக்கிறாள்.
டோராவுக்கு
அவள் வீட்டிற்குப் போவதற்கே வழி தெரிவதில்லை.
'நான்தான் மேப்... மேப்' என்று பாடியவாறே வந்து
ஒரு மேப் வழி சொல்கிறது:
'அடர்க்காடு, தொங்குப்பாலம், டோராவோட வீடு
சொல்லுங்க
அடர்க்காடு, தொங்குப்பாலம், டோராவோட வீடு.'
வீட்டை எதுக்கு இதையெல்லாம் தாண்டிப் போய்
கட்டி வைத்தீர்களெனக் கேட்காமல்,
'நாம எங்க போறோம்... டோராவோட வீட்டுக்கு
நாம எங்க போறோம்.... டோராவோட வீட்டுக்கு' - கைதட்டி பாடி அடர்க்காட்டில் டோராவோடு குழந்தைகளும் பயணிக்கிறார்கள்.
கொஞ்சத் தூரத்தில் 'உங்க கண்ணுக்கு ஏதாவது தெரியுதா' என்கிறாள் டோரா. புஜ்ஜி உள்பட எல்லோரும் பயப்படுகிறார்கள்.
குள்ளநரி ஒண்ணு மறைந்து மறைந்து வருகிறது.
'குள்ளநரி திருடக் கூடாது...
குள்ளநரி திருடவே கூடாது' - எல்லோரும் கெஞ்சுகிறார்கள்.
'என்ன.... நான் திருடுறேன்னா' என்று ரோசக்கார நரி திரும்பி ஓடுகிறது.(தாமதிச்சா பையிலிருக்கும் எல்லாத்தையும் திருடித் தூக்கிப்போட்டுவிடும்.)காட்டைக் கடக்கிறார்கள்.
அடுத்து தொங்குப்பாலம்.
அதை எப்படிக் கடப்பதெனத் தெரியாமல் தவிக்கிறார்கள்.
டோரா யோசனை சொல்கிறாள்.
'இப்படிக் கயித்தைப் பிடிச்சுக்கிட்டு எல்லோரும் சொல்லுங்க
ஜம்ப்.. ஜம்ப்.. ஜம்ப்...ஜம்ப்..'
தாண்டி முடித்து வீடு சேரும்போது
எல்லோரையும் வரவேற்று டோரா அம்மா 'ஹாய்' சொல்ல
குழந்தைகளுக்கு நன்றி சொல்லி
'நாம ஜெயிச்சிட்டோம்... ஜெயிச்சிட்டோம்' என்று டோரா பாட
வீடுகளின் உள்ளறைகளிலிருந்து வரும் அம்மாக்கள்
குழந்தைகளைவிட வேகமாக கைதட்டி ஆடுகிறார்கள்
அரை மணி நேரம் எந்தத் தொந்தரவுமின்றி
துணி துவைக்க முடிந்ததற்காக... சமைக்க முடிந்ததற்காக.
நன்றி: உயிரோசை

2 comments:

கலையரசன் said...

அருமையா எழுதுறீங்களே, அட மெய்யாலுமே!
தொடருங்கள்... வாழ்த்துக்கள்!!

ஓட்டும் போட்டாச்சு..

த.அரவிந்தன் said...

நன்றி