Monday, June 15, 2009

புகைவண்டிக் கன்றுக்குட்டிகள்




நாலரை மணிக்குத்தான் வரும்
எனில்
நாலு இருபதுக்கே

யானை குளத்தோரத் தண்டவாளங்களில்

புகைவண்டியைச் சுவாசிக்கும் கன்றுக்குட்டிகளாய்

துள்ளிக் குதித்து குழைவோம் அந்நாள்களில்


கால்சட்டை அணியும் லதாவும்

சிவப்பு ரிப்பன் பின்னலிட்ட சடைமுடி முரளியும்

ஒத்த தண்டவாளத்தில்

பிடிமானம் இல்லாமல் நடந்து பந்தயமிடுவார்கள்

கீழே கால் படாமல்

அதிக தூரம் நடந்து

லதாவே எப்போதும் ஜெயிப்பாள்


வாயோசையில் ஓடும் என் புகைவண்டியின்

கால் சக்கரங்கள்

தண்டவாளத்தின் ஒவ்வொரு நடு கட்டை

நிலையத்திலும் நின்று

பத்து கட்டைகளுக்குள்

திருக்கடையூரிலிருந்து மயிலாடுதுறைக்குப் போய்ச் சேர்ந்து

திரும்பி வரும்


அக்குளுக்குள் உள்ளங்கையை அழுத்திக் கொண்டு

தோள்பட்டையைத் தூக்கித்தூக்கியடித்து

அழுக்குச் சத்தம் எழுப்பும் சிங்காரம்

வண்டி வருமோசை கேட்டதும்

சின்ன செங்கல் துண்டையும்

காய்ந்த களிமண் உருண்டையையும்

தண்டவாளத்தில் இடைவெளிவிட்டு வைத்து

எல்லோரையும் தூர வந்து நிற்கச் சொல்லி கத்துவான்

ஓட்டுநரின் கரிகட்டை வீசலுக்கு நடுங்கி


தூரத்தில் அதிராது வருவது

நெருக்கத்தில் வந்ததும்

திடீரென மோதி கிழிக்கிற சத்தத்தால்

எங்கள் தோல்களைக் கிழித்துக்கொண்டு

நரம்புகளைத் தண்டவாளமாக்கி

தடதடத்து அதிரப் புகுந்து வளைந்து போகும்


ஞாபக மூலையில் கடைசிப் பெட்டியும்

போய்ச் சேர்ந்ததும்

அரைக்கப்பட்டிருக்கும் திருநீறு குங்குமத்தை

சூடாயெடுத்து வந்து பூசிவிடுவாள் சத்தியவாணி


தடம்புரண்டு தொலைக்காட்டில் தொலைந்து

இருபது வருடங்களுக்குப் பிறகு

நேற்றைய பனிக் காலையில்

ஊரில் என்னைக் கண்டெடுத்துக்கொண்ட

முதல் பார்வையில்

லதாவைப் பார்த்தேன்


சேர்ந்த வாழ்க்கையின்

மனம் ஒத்த தண்டவாளத்தில்

குறைந்த தூரமே நடந்து

முரளியால் தோற்கடிக்கப்பட்ட

நடையைச் சொன்னாள்


நேற்று மாலை

நாலு இருபதுக்கு

இரண்டாம் முறையாக

லதாவைப் பார்த்தேன்

வசூலில்லாத ஈர்ப்பால் அதிகாரப் பறவைகள்

நிரந்தரமாகப் பெயர்த்தெடுத்துப் போயிருந்த

தண்டவாளங்களை நினைத்து

ஏங்கி வீங்கி புல்முளைத்து

நீண்டு போகும் மண்சுவடுகளில்

என் புகைவண்டியை ஓட்டத்தொடங்கியபோது...

நன்றி: வார்த்தை

2 comments:

ஆர்வா said...

மிக அழகிய கவிதை

த.அரவிந்தன் said...

நன்றி