Friday, May 22, 2009

கனிஷ்கா இமையை நடைபாதையாக உபயோகிக்காதீர்

வேப்பம்பழங்களாகப் பிதுங்கி
வழியெங்கும் வழிபவர்களில்
சாகசம் புரியும் ஒருவனைத் தேடுகிறாள்.
மேலேறுவதற்கு
சரிந்து
ஒரு காலை மடக்கிக் கொடுக்கும் யானையைப்போல
இமைகள் இணையும் கூர்முனைகளில் அவள் அனுமதிக்கிறாள்.
தொத்துபவரெல்லாம்
மையிட்ட விளிம்புகளை
மரநிழலுள்ள நடைபாதையாக உபயோகிக்கத் தொடங்குகிறார்கள்.
அதை அவள் விரும்புவதேயில்லை.
மேடேறும், சரியும் நடைகளில்
பரவசத்தைப் பதற்றத்தில் தொலைப்பவர்;
அந்தரத்துக் கயிற்றில்
அடிஅடியாய் நடப்பதுபோல் கடப்பவரையெல்லாம்
கவலையேகொள்ளாமல்
பாறாங் கல்லில் விழுந்து சிதறிப்போக
இமைத்து தள்ளிவிடுகிறாள்.
கால் கட்டை விரலை அழுத்தி வேகமெடுத்து
தடைகள் தாண்டி ஓடிவந்து
மேலிமை மைய பீலியின் உயரத்துக்கும்
மேலெழும்பி
கிறுகிறுவென குட்டிக்கரணங்ககககககள் அடித்தபடியே
கீழறங்கி
கைகளை உயர்த்தி விரைத்து
ஒருவன் நின்றபோது மட்டுமே
அவள் மென் கண்களின் செந்நரம்புகள்
லேசாகப் புடைத்திருக்கின்றன.
நன்றி: ஆனந்தவிகடன்

No comments: