கதை வனங்களில் பல்கியிருப்பதுபோல்
அடர் கவிதைகளில் நரிகள்
அதிகம் இனப்பெருக்கம் செய்யாதது
ஏன்?
வேர் சங்கிலி துண்டிக்காத பெரும் வனம்
பூமியையே இழுத்துக்கொண்டு பாயும் நதி
பல்லுயிர்களின் மூச்சு சுழற்சிகள்
இவற்றோடுதானே ஒரு பாட்டி
பேரன், பேத்தியிடம் கதையை ஒப்படைக்கிறாள்
முளையடித்து நரிகளை மட்டும்
தங்களோடு கட்டிப்போட்டுக்கொண்டு
மற்றவற்றை அவர்கள் விரட்டியழிப்பது
ஏன்?
பதின் வயது பரவசம்
அவன்/அவள் கருவிழிகளில் நிழலாய் விழ
நரிகளை
கதையிலிருந்து கவிதைக்கு
அவர்கள் ஓட்டிவிடுவது
ஏன்?
வழித்துணைக்குச் சூரியனை
அழைத்துப் போனாலும்
ஒளிக் காட்டில்
அருகில் நிற்கும் நரிகள்
எவருக்கும் தெரிவதே இல்லையே
ஏன்?
ஏன்?
ஏன்?
ஏன்?
ஏன்?
என்பதற்குள்ளேவும்
ஒரு நரியாக ஒளிந்திருந்து
உங்கள் மேல்
நான் பாய்வதை உணராமலிருப்பது
ஏன்?
நன்றி: உயிரோசை
No comments:
Post a Comment