Friday, March 4, 2011

சிரிப்புவெட்டி




24


இரும்பில் வேண்டாம் என்று தங்கத்தில் எனக்காக ஒரு கோடாலி செய்துவைத்திருக்கிறான் என் அருமை நண்பன். என் சிரிப்புச் சத்தம் அவனுக்கும் மட்டும் எப்படியோ கேட்கும். கோடாலியோடு வருவான். ஓங்கி என் உதட்டில் ஒரு வெட்டு வெட்டுவான். ஒரு முறை வெட்டிய இடத்தில் மறுமுறை வெட்டுவதில்லை. இவ்விதிமுறையோடு வெட்டிவெட்டியே மேலுதடையும் கீழுதடையும் முற்றாய்த் துண்டித்து முடித்து, முகத்தின் மற்ற உறுப்புகளையும் சிதைத்து விட்டான். தீரா வலியெல்லாம் ஒருபுறமிருக்க ஒவ்வொரு முறை அவன் சிதைக்கையிலும் எனக்குத் தோன்றும் ஒரே ஆச்சரியம் அவன் எப்படி என் சிரிப்பைக் கண்டறிகிறான் என்பதுதான். ஏனெனில் அவன் எப்போதும் கடலின் நீர்மட்டத்தின் மேலேயே அலையாய் அலைந்துகொண்டிருக்கிறான். நான் அவனைச் சிறிதும் கவனிக்காமல் கடலின் அடியாழத்திலேயே வாழ்கிறேன். எனக்கும் அவனுக்கும் நான்காயிரம் மீட்டர் ஆழத் தூரம் இடைவெளி. இத்தூரத்தில் என் சிரிப்புச் சத்தம் எப்படிக் கேட்கும்? அதுவும் நான் சிரிக்கவே சிரிக்காதபோதும். மீனின் மூச்சுமுட்டைகள் போல என் சுழிப்பு ஏதாவது கீழிருந்து மேலே வளையமாகப் போகிறதா என்றால் அதற்கும் வாய்ப்பில்லை. சுழிப்புக்காக என் உதட்டில் அவன் முதல்முறையாய் வெட்டியபோதிலிருந்தே அவன் அறியாமைக்குப் பயந்துகொண்டு காட்டெருமையின் தோலைப் போல எல்லாப் பாகங்களையும் இறுக்கமாய் முறுக்கிக்கொண்டுதான் இருக்கிறேன். இவற்றையெல்லாம் தவிர வேறு வழிகளும் இல்லாதபோது எப்படி அவன் மட்டும் என் சிரிப்புச் சத்தத்தைத் துல்லியமாய் அறிகிறான் என்றுதான் தெரியவில்லை. இப்போதும்கூடப் பாருங்கள். ஏதோ அவன் எழுதியிருப்பான்போல. மேலே அலையும் அவனுக்கு என் சிரிப்புச் சத்தம் கேட்டிருக்கிறது. இறங்கி வந்தவன் பல நாளாய் அடியாழத்திலேயே அழுகிக் கிடக்கும் என் பிண உடலை ஆவேசத்தோடு சிதைத்துவிட்டுப் போகிறான். என் அழுகலின் தெறிப்பு உங்கள் மேலும் பட்டிருக்கலாம். துடைத்துக் கொள்ளுங்கள்.

No comments: