Saturday, March 5, 2011

கலையும் பொழுது



25

செத்துப்போன கண்களோடு ஒரு பொழுது, அவன் கண்களுக்குள் ஊடுருவிப் பேசியது:
"வெறுக்கத்தக்க புழுவாக ஒரு வீட்டு வாசலில் துடைப்பத்தால் இப்போது நீ அடி வாங்குகிறாய். மரக்கிளையில் உட்கார்ந்து ஒரு குருவி உன்னைப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறது''
"இல்லை. உன் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். நான் மனிதன்.''
"இல்லை. இப்போது நீ ஆப்கனில் வெடிகுண்டு வெடித்துச் சிதறிக்கிடக்கிறாய். உன் குழந்தைக்காக நீ வாங்கியிருந்த புதுச்சட்டையில் இரத்தம் ஊறிக்கொண்டிருக்கிறது.''
"இல்லை. உன் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். நான் இந்தியன். என் பெயர் ஞாயிறு. எனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை.''
"இல்லை. இப்போது நீ ஒரே சமயத்தில் இருவரோடு விபச்சாரம் செய்துகொண்டிருக்கிறாய். உன்னைப் பிடிக்க காவலர்கள் படியேறி வந்துகொண்டிருக்கிறார்கள்.''
"இல்லை. உன் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். நான் ஆண். ''
"இல்லை. இப்போது நீ ஒரு கோயில் வாசலில் உட்கார்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறாய். பல நாளாய் யாருக்கும் தெரியாமல் அழுக்குக் கோணியில் நீ சேர்த்து வைத்திருந்த கோடி ரூபாயைப் பறிக்க உன்னை ஒருவன் நெருங்கி வருகிறான்.''
"இல்லை. உன் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். நான் கணித நிபுணன்.''
"ஆமாம்''
"ஆமாம். ஆமாம். நான் உன் முன்னால்தான் உட்கார்ந்திருக்கிறேன். என் பெயர் ஞாயிறு. நான் கணித நிபுணன்.''
"இல்லை. இப்போது நீ ஒரு கோழிக்குஞ்சு. ஒரு பருந்து அதிவேகத்தில் உன்னை நோக்கி இறங்கிக்கொண்டிருக்கிறது.''
"...''
"...''

4 comments:

Anonymous said...

அருமையானதொரு படைப்பு வாழ்த்துக்கள்

த.அரவிந்தன் said...

நன்றி இக்பால்

ஞாஞளஙலாழன் said...

ரொம்ப நல்லா இருக்கு. கடைசி வரிகள் அருமை.

த.அரவிந்தன் said...

நன்றி தோழர்