Tuesday, September 1, 2009

வொரு மொற மதி - சிறுகதை



1978-ல வொரு மொற மதி
---------------------------------
நாலாம் வகுப்பு படிக்கிறப்ப, வொரு வொற மதி, பள்ளிக்கொடத்துல இருந்து ஆஃப் டேவுலயே வீட்டுக்கு வந்தான் . வந்தவனுக்கு வொரே அதிர்ச்சி. தாத்தா காப்பி குடிச்சிக்கிட்டு உசிரோடு உக்காந்திருந்தாரு. எப்டியாவது தாத்தா செத்திருக்கணும்னு வர்ற வழியெல்லாம் வேண்டிக்கிட்டே வந்துது பலிக்கவே இல்ல. 'ஒக்காளவோழி சாமிங்க'. 'வாத்தி செத்துட்டாரு அதான் லீவு' ன்னு தாத்தாட்ட சொல்லிட்டு பசங்களோடு காட்டாமணிச் செடி காட்டுக்குப் போனான். காய்ஞ்ச பறங்கித் தண்ட பீடியா பிடிச்சுக்கிட்டு யாருக்கும் தெரியாம மறைவுல உக்காந்திருந்தான். பள்ளிக்கொடத்துக்கு டிமிக்கி கொடுத்துதுக்குக் காரணம் கேட்டான் சுப்பீ...பீ. 'பசங்கெல்லாம் என்ன மலர்விழி... மலர்விழினு கூப்பிட்டானுங்க. அட்டனென்ஸ கிழிச்சிப் போட்டுட்டேன். முண்டக்கண்ணு வாத்தி தெரிஞ்சா அடிப்பாரு. அதான் தாத்தா செத்துட்டாருன்னு சொல்லிட்டு வந்துட்டேன்'னான். அட்டனென்ஸýக்கும் மலருக்கும் என்ன கனெக்ஷன்னு கேட்டான் மாக்கான். ஆம்பளைங்க பேரையும், பொம்பளைங்க பேரையும் தனித்தனியா எழுதி வைச்சிருக்கானுங்க. அவவன் பேருக்கு நேரா வர்றது அவவன் செட். எனக்கு மட்டும் அந்தச் சப்ப மூக்கி மலர்விழி பேருன்னான். ஓசிப்புள்ள சும்மா இருக்காம, "மலர்விழி..மலர்விழி'ன்னு மதிய கூப்பிட்டான். விரலை மடக்கி, முறிக்கின கையிக்கு வொரு முத்தம் கொடுத்து, ஓசிப்புள்ள மூஞ்சில மதி ஓங்கி வொரு குத்துவுட்டான். பதிலுக்கு ஓசிப்புள்ளயும் செடி மேலயே மதியப் போட்டு பொரட்டி, டவுசரையும் அவுத்துவுட்டான். பச்சப் பாம்பு வொண்ணு போறத பாத்துட்டு திடீர்னு கருப்பன் கத்துனான். பசங்க அப்டியே திருப்பிக்கிட்டு பாம்ப வெரட்ட ஆரம்பிச்சானுங்க. அரணாக்கயிற டவுசர் மேல இறுக்கிக் போட்டுக்கிட்டு மதியும் பாம்ப அடிச்சிப்போட்டு வீடு வந்தான். செத்துப்போன வாத்தி, தாத்தனோடு உக்காந்திருந்தாரு. வொரே சமயத்தில ரெண்டு பேரயும் சாகடிச்சதற்காக மதிய நைய்ய புடைச்சா அம்மாக்காரி. ஆம்படையான் அவள அடிக்கும் முறையில வொண்ணு மிச்சமிருப்பது நெனவுக்கு வந்துது. அதயும் யோசிச்சு அடிச்சு முடிச்சா. அட்டனென்ஸ கிழிச்சுதுக்கு அடிவாங்க மதி, உடம்பு முழுக்க வெளக்கெண்ண தடவிக்கிட்டு மறு நா பள்ளிக்கொடம் போனான்.

1988-ல வொரு மொற மதி
----------------------------------
'பேரன்களுக்கு நடுவுல வொரு பெரியவரு உக்காந்திருக்காரே .... அவுரு கொஞ்சம் எழுந்திருக்க முடியுங்களா'ன்னு மதிய மரியாதயா எழுப்பாத வாத்திகளை உடனே வீட்டுக்கு அனுப்பிடுவோம்ன்னு ஏதோ வொரு கல்வி அதிகாரி உத்தரவு போல. எந்த வாத்தியும் அந்த உத்தரவ மீறுறதில்ல. எட்டாம் வகுப்ப நாலு வருஷம் பலமா படிக்கிற மதிக்கு இந்தச் சின்ன மரியாதகூட கொடுக்கலன்னா அநியாயமா இல்லாம பின்ன என்னன்னு அவரு தெருவாசிக மத்தியிலகூட பரவலா பேச்சு. ஆனா, பேரன்கதான் பாவம். பெரியவர வாத்திக எழுப்பும்போது பேரன்க எவனாவது சிரிச்சிப்புடுவானுக. தேன்மிட்டாய் வாங்கிக் கொடுத்தாலும் சிரிச்ச பேரனுகள பெரியவரு விடமாட்டாரு. இன்டர்வெல் நேரத்துல வெரட்டிவெரட்டி அடிப்பாரு . மரியாத தெரியாத பயலுககூட இனி சேர்ந்து படிக்கக் கூடாது. எப்டியாவது எட்டாவது முடிச்சிட்டு ஒன்பதாவது வேற பள்ளிக்கொடத்துல போயி சேர்ந்துடணும்னு இப்பெல்லாம் வெறியோடு படிக்கிறாரு. இன்னிக்கிக்கூட இங்கிலீசு, சைனஸ் வாத்திக கொடுத்த வீட்டுப்பாடம் அத்தனயயும் முடிச்சிட்டு வந்து காட்டி சபாஷ் வாங்கிட்டாரு. அடுத்து மேக்ஸ் பீரியட். பயலுக எல்லாம் சேர்ந்து, "வீட்டுப்பாடம் ஏன்டா செய்யலன்னு டீச்சர் கேட்டா...சொல்லிக்குடுத்துது புரியல டீச்சர். இன்னொரு தடவ சொல்லிக்கொடுங்கன்னு கேட்கணும்'னு முடிவெடுத்தானுக. பெரியவரு வொத்துக்கவே இல்ல. காயத்ரி டீச்சர் வந்து கேட்டாக. எல்லாப் பயலும் புரியலைன்னுட்டானுக. பெரியவரு மட்டும் எல்லாக் கணக்கும் போட்டிருந்தாரு. நோட்ட வாங்கி பாத்து அசந்துட்டாக. இந்த மாதிரி நேரத்துல வொண்ணாம் வகுப்புக்கு ட்யூசன் எடுக்கிற, எட்டாம் வகுப்புல பெயிலாகி, வீட்லயே உக்காந்திருக்கிற டீச்சர் மாதிரிககூட பழமொழி சொல்றது வழக்கம். "பாருங்கடா.. வரவர மாமியாரு துடைப்பக்கட்ட மாதிரி ஆனாருங்கிறது போல நீங்க ஆயிட்டீங்க. பெரியவரு அசத்திட்டாரு பாருங்கடா'. "டீச்சர் தப்பா சொல்றீங்க... கழுத மாதிரி டீச்சர்'. "தெரியும் சும்மா இருங்கடா... பெரியவரே! அப்படியே நீங்க போட்ட கணக்கு எல்லாத்தயும் பசங்களுக்கும் போர்டுல போட்டுக் காட்டிடுங்க. பசங்க கத்துக்கிட்டும்'. பெரியவரு சாக்பீஸ எடுத்துக்கிட்டுப் போய் போர்டுகிட்ட நின்னாரு..நின்னாரு...ரொம்ப நேரம் நின்னாரு. எல்லாம் மறந்துபோச்சு டீச்சர்ன்னாரு. "நோட்டுல நீதான போட்ட ... அதை அப்படியே போர்டுல போடப் போற அவ்வளவுதான். நான் பக்கத்துலயே இருக்கேன். பயப்படாம போடு.' ஊக்கு விக்கிறதுல காயத்ரி டீச்சருக்கு நிகரா வேற்று கிரகத்துலயும் யாரும் இருக்கப் போறதில்ல. "பெரியவரு எங்க டீச்சர் போட்டாரு. வெற்றி நோட்ஸýல போட்டிருந்துது. அத அப்படியே எழுதிட்டு வந்தாரு'ன்னு பாவாடை போட்டுக்கொடுத்துட்டான். அடிக்கவே அடிக்காத டீச்சர் வேலயே போனாலும் பரவாயிலங்கிற ரேஞ்சுக்கு பெரியவர அடிச்சுது. டீச்சர துன்புறுத்துன துயரம் தாங்கமுடியாம அந்தப் பக்கமா போய்க்கிட்டிருந்த ஸ்டைல் வாத்தி உள்ள வந்தாரு. தேம்புன குரலுல டீச்சர் எல்லாத்தயும் சொல்லிச்சு. ஏற்கனவே ஸ்டைல் வாத்திக்கும் பெரியவருக்கும் முன்விரோதம் இருந்துது. ஸ்டைல் வாத்திக்கு "அன்டராயர் ஸ்டேன்ட'ன்னு இன்னொரு பட்டப் பெயரும் உண்டு. அத பெரியவருதான் வச்சாரு. ஸ்டைல்வாத்திக்குப் பிடிச்சு இங்கிலீசு வார்த்த "அன்டர்ஸ்டேன்ட்'. தமிழ் வாத்தியா இருந்தாலும், "திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்... அன்டர்ஸ்டேன்ட்... அறத்துப்பால், பொருட்பால், காமத்துப் பால் என முப்பால்களால் ஆனது திருக்குறள்... அன்டர்ஸ்டேன்ட்... 133 அதிகாரமும், 1330 குறள்களும் கொண்டது திருக்குறள்... அன்டர்ஸ்டேன்ட்'ன்னு எல்லாத்துக்கும் அன்டர்ஸ்டேன்ட் வார்த்தய சேர்த்து இங்கிலீசு பொலமைய காட்டுவாரு. வொரு வகுப்புல பெரியவரு, வாத்தி அன்டர்ஸ்டேன்னு சொல்ல சொல்ல, வொண்ணு ரெண்டு மூணு போடத் தொடங்கி பசங்க நூறு வந்தப்ப செஞ்சுரின்னு கத்தியும்பூட்டானுவ. கத்தின விவரம் கேட்டுத் தெரிஞ்ச வாத்தி பெரியவர கன்னத்துலயே "பளார்பளார்'ன்னு அறைஞ்சாரு. ஸ்டைல்வாத்தியாரில்லையா எப்பவுமே வித்தியாசமாதான் அடிப்பாரு. தங்கம் மோதரம் வொண்ணு போட்டிருப்பாரு. அதக் கழட்டி மேலே போடுவாரு. கீழ வர்றதுக்குள்ள கன்னத்துல அறைஞ்சிட்டு மோதரத்த பிடிப்பாரு. திரும்பவும் மேல போடுவாரு. அறைவாரு. பிடிப்பாரு. இன்னைக்கும் அப்டித்தான். ஸ்டைல்வாத்தியாரு மோதரத்த கழற்றி மேல போட்டாரு. ஆனா இன்னைக்குப் பெரியவரு மோதரத்த பிடிச்சாரு. ஒக்காளவோழின்னு கத்திக்கிட்டு வாத்தியாரு கன்னத்துல வொரு அறைவிட்டாரு. மோதரத்த பசங்க மேல தூக்கியடிச்சிட்டு, பையத் தூக்கிட்டுப் பள்ளிக்கொடத்த விட்டே போனாரு. போட்டுக்கொடுத்த பாவாட பயத்துல ஒண்ணுக்குக்கெல்லாம் போகாம வகுப்புலயே வயிறு கலங்க உக்காந்திருந்தான். சாங்காலம் பெல்லு அடிச்சதும் கூட்டத்தோடு கூட்டமா யாரயும் திரும்பிப் பார்க்காம வொரே ஓட்டமா வீட்டுக்கு ஓடுனான்.

1991-ல வொரு மொற மதி
------------------------------------
மாண்புமிகு. மதி அவர்கள்
பொதுப்பணித்துறை அமைச்சர்
கேட்கவே எம்மோ ரம்யமா இருக்கு. எப்டியும் ஆகியே தீர்றதுங்கிற நம்பிக்கையோடு வட்டம் ஜனாவோட கடைக்குட்டி அடியாளா இருந்து வர்றாரு மதி. சமீபமா மதி பொலிடிக்கல் கேரியர்ல மிகப்பெரிய சறுக்கல். அவருடைய அரசியல் வாழ்க்கயே சூன்யமானதுபோல இடிஞ்சிப்போயிட்டாரு. அது கொஞ்சம் சீரியஸôன விசயம்தான். மதியோட அரசியல் வழிகாட்டி செண்பகாதேவி. மாநிலக் கட்சி பக்கமா.. கவனம் செலுத்திக்கிட்டிருந்தவர, தேசிய கட்சி பக்கமா இழுத்து வந்ததே செண்பகாதான். கட்சி பக்கமாங்கிறதுல அதிகமா அவுங்க பக்கமாங்கிறதயும் சேத்துக்கணும். செண்பகா நடந்தா எந்தப் பட்டி ரோடாயிருந்தாலும் சும்மா அப்டி ஜிலுஜிலுங்கும். ஆனா செண்பகா வூட்டுக்காரருக்கு அந்த ஜிலுஜிலுப்பு தெரியவேயில. வொறையவிட உலகத்துல ஒசத்தி வொண்ணுமில்லங்றத தெளிவா புரிஞ்சிக்கிட்டவரு. ஆரம்பத்துல மதி மேல சின்னப்பய மீதான பார்வதான் செண்பகாவுக்கு இருந்துது. அது எப்டியோ தெரியல பொசுக்குனு ஒரு நா இராவு பெரிய பயலா தெரிஞ்சான். அதுக்கப்பறம்தான் அடக்கி ஒடுக்குற பெரிய மனுஷனா ஆயிடுவான்ல்ல. மதி வார்த்தக்கிக் கட்டுப்பட்டுத்தான் செண்பகா கொஞ்ச நா குளிக்கக்கூட செஞ்சாங்க. ஆனா, அரசியல் அல யாரயும் விடறதில்ல. கூட மதி இருக்கும்போதே வட்டம் எப்டியோ செண்பகாவ வளைச்சிட்டாரு. விஷயம் தெரிஞ்சு மதி கொதிச்சுப்புட்டாரு. நூல்நூலா அரசியல பிரிச்சி வட்டம் அலசுற எடத்துக்குப் போனாரு. ஏறுறதுக்கு ரெண்டு பக்கமும் படிக உள்ள மாடிக் கட்டடம் அது. பச்சை வெள்ள நிற டவுசர் தெரிய வேட்டிய தூக்கிக்கட்டிக்கிட்டு உக்காந்து, வட்டம் மாடியில சீட்டு விளையாடிக்கிட்டு இருந்தாரு. மேல வந்த மதி, "யாரு மேலடா கை வைக்கிற'ன்னு கத்துனாரு. "யார் மேல கை வைக்கிறதுக்கு, யாருட்டடா அனுமதி கேட்கணும்'னு வட்டமும் பதிலுக்குக் கத்துனாரு. அவ வூட்டுக்காரனே சும்மா இருக்கான், நீ யாருடா கேட்குறதுன்னு வட்டம் குத்திக் காட்டுறது தெரிஞ்சதும் மதிக்கு ரோசம் பொத்துக்கிட்டு. அடிக்கப் பாஞ்சாரு. மத்த அடியாளுக வேடிக்க பார்த்துட்டு சும்மா நின்னிருந்தானுக. வட்டம் மிரண்டு போயிட்டாரு. படி வழியா எறங்கி ஓடுனாரு. மதி விடாம வெரட்டுனாரு. கீழிறங்குனவரு இன்னொரு பக்க படி வழியா திரும்பவும் மாடிக்கே வந்தாரு. அரசியல் சமயோசிதம்னா இதான். வெளிய ஓடி எல்லாருக்கும் தெரிஞ்சா கட்சிக்குத்தான கெட்டப் பெயரு. ரெண்டு ரவுண்டு இப்டியே சுத்தி வந்தாக. அப்புறம் அடியாளுக மதிய பிடிச்சி விலக்கிவிட்டானுக. ரெண்டு ரவுண்டு சுத்துனதுல மதிக்கு ரோசம் கொஞ்சம் கொறைஞ்சு போயிருந்துது. "வெளிய வாடா.. உன்ன பெட்ரோல் ஊத்தி கொளுத்தாம விடமாட்டேன்'னு சொல்லிட்டு, மதி எறங்கிப் போயிட்டாரு. வட்டத்துக்கு கொல நடுங்கிடுச்சு. எறங்கிறத பத்தி யோசிக்கவே இல்ல. "வாங்க தலவரே நாங்க இருக்கோம். பாத்துக்குறோம்'ன்னு யார் சொல்லியும் வட்டம் கேட்கல. லூசுப் பய செஞ்சாலும் செஞ்சிப்புடுவான்டான்னு சொல்லிக்கிட்டிருந்தாரு. அப்புறம் நாலைஞ்சு மணி நேரம் கழிச்சி, வொண்ணுக்கு ரெண்டு மூணு பேரா கீழ அனுப்பி, பார்த்துட்டு வரச்சொல்லிட்டுத்தான் எறங்கிப் போனாரு. நாலைஞ்சு நா மதியும் தனியாதான் சுத்திட்டிருந்தாரு. பாழாப் போன மனசு கேட்குமா... செண்பகாவ பாக்கப் போனாரு. "வட்டம் சும்மா... வொண்ணுத்துக்கும் லாயிக்கில்ல.. நீதான் எனக்கு எல்லாமும்...நம்ம பொலிடிக்கல் பேக்கிரவுண்டுக்கு ஏதாவது உதவுமே'ன்னு செண்பகா உருகுனதுல மதியும் தணிஞ்சு போனாரு. வட்டத்துக்கிட்ட மதிய திரும்பவும் செண்பகாவே அழைச்சு வந்தாக. வட்டத்துக்கும் வெட்கம். மதிக்கும் வெட்கம். "என்னடா பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுவேன்னு சொன்ன'ன்னு வட்டம் இழுத்தாரு. "நான் ஏன் தலைவர உங்கள கொளுத்தறேன். என்ன நானே கொளுத்திப்பேன் தலைவரே'ன்னு மதி சொன்னாரு. உச்சி குளிந்துபோன வட்டம் அட்வைஸô அடுக்க ஆரம்பிச்சிட்டாரு. "தே பாருடா மதி... யானை மேல ஏறுணும்னு ஆசப்பட்டா மட்டும் போதுமா... அதுக்கு தகுந்த நீட்டு வேணா. சரி அத வுடு. வொரு சிட்டு இருக்கு. பேங்ல வேல. மாசம் பதிமூணாயிறம் சம்பளம். வூட்டுக்காரன் அவள வுட்டுட்டு எங்கயோ போயிட்டான். நீ அதுக்கு வொண்ணும் செய்ய வேணாம். அவ உனக்கு எல்லாம் செய்வா. நா தவறாம போயி, நீ ஏறிட்டு மட்டும் வந்தா போதும். என்ன சொல்ற... அவள கட்டிக்கிறியா'ன்னு ரொம்ப கரிசனமா கேட்டாரு. "ஒக்காளி இருடா எனக்கா பொண்ணு பாக்குற. உன் பொண்ண ஏறாம விடுறதில'ன்னு உள்ளுக்குள்ள கறுவிக்கிட்டே "அதலாம் வேணாங்க தலவரே'ன்னு மதியும் பணிவா சொன்னாரு. கட்சிக்கு விசுவாசமா நடந்து வட்டத்தவிட பெரிய போஸ்டிங்கும் வாங்கிடணும்னு மதி சபதமும் எடுத்தாரு. வொரு மொற அருமையான வாய்ப்பு கிடைச்சுது. அவங்க தேசிய கட்சித் தலைவரு திடீர்னு இராவுல செத்துப்போயிட்டாரு. மறு நா காலயில பதினோரு மணிக்கு மேலதான் மதிக்கு விசயமே தெரிய வந்துச்சு. கலாட்டா செய்றதுக்கு ஆளுகள அழைச்சுக்கிட்டு மெயின் சாலைக்கு வந்தாரு. ஒரு பய கட திறக்குல. எல்லா கடயும் பூட்டிக்கிடக்கு. மதி மனம் தளருல. நாம யாருனு காட்டணும். கிடைக்கிறதெல்லாம் இழுத்துப்போட்டு உடைங்கடான்னாரு. வெளியில மாட்டியிருந்த பல்பு, பெயர்பலக எல்லாத்தயும் உடைச்சானுக. மரப் பொருளுகள உடைச்சி கொளுத்திவுட்டானுக. மளிக கடக முன்னால உப்பு மூட்ட கிடந்துது. அதயும் எடுத்து நடு ரோட்டுல கொட்டுனானுக. ரெண்டு பக்கக் ரோட்டயும் மதி திரும்பிப் பார்த்தாரு. எரியுறதும், சிதறிக் கிடக்கிறதுமா பெரிய கலவர கோலமா தெரிஞ்சுது. மதிக்கு வெற்றி பெருமிதம். திரும்பித்திரும்பி பாத்துக்கிட்டே இருந்தாரு. திடீர்னு மதிக்கு காலயில சாப்பிடறப்ப வீட்டுல உப்பு இல்லன்னு சொன்னது நெனவுக்கு வந்துது. உடனே மதி ரோட்டுல கொட்டியிருந்த உப்ப அள்ளி லுங்கியில கட்டிக்கிட்டு வேகமா வீடு வந்து சேர்ந்தாரு.

1992- ல வொரு மொற மதி
----------------------------------
'தமில் இங்கிலீசு ரெண்டுமே நமக்குத் தண்ணிப்பட்ட பாடுதான். இருந்தாலும் தமில்லயே பேசுங்க 'ன்னு எலெக்ஷன் ஆபீசருட்ட மதி சொன்னாரு. "நூறு மீட்டருக்கு அப்புறம்தான் எதுவா இருந்தாலும் வச்சுக்கணும். இது கடைசி வார்னிங். இன்னொரு தடவ இங்க நின்னு சீட்டுக் கொடுத்தா உள்ள வச்சிடுவேன் பார்த்துக்கோ'ன்னு எலக்ஷன் ஆபீசரு சொன்னாரு. "இதுக்கு எதுக்கு இங்கிலீச கோதாவுல எறக்குறீங்க. தமில்யே சொல்லலாம்'லன்னு சொல்லிட்டு, சத்தம் போடாம நூறு மீட்டர கடந்த மதி, "எதுவா இருந்தாலும் நூறு மீட்டருக்கு அப்புறமா வச்சுக்குங்கன்னு சொல்றானே. அவன் பொண்டாட்டியையுமா?'ன்னு கூட இருந்த பசங்கள்ட்ட குதிச்சாரு. "அதயெல்லாம் பெரிசா எடுத்துக்காத மதி, நம்ம கட்சி ஜெளிச்சிடுங்கிற பயத்துல, கோதண்டன் எலக்ஷன் ஆபீசர்ட்ட போட்டுக் கொடுத்திருப்பான்... எலிய விட்டுட்டு அம்ப எதுக்கு நோகணும் சொல்லு'ன்னு மொட்டயன் எடுத்துக் கொடுத்தான். "நம்ம கட்சி ஜெளிச்சிடும்னு என்னம்மா மொட்டயன் ஏத்திவிடுறா'ன்னு மதி உள்ளுக்குள்ள சிரிச்சிக்கிட்டாரு. நேத்தே வட்டம் மதி கிட்ட தெளிவா சொல்லிட்டாரு. நம்ம கட்சி தோக்குறதுங்கிறது உலகறிஞ்ச உண்ம. ஆனா நாம தோக்கக் கூடாது. அதான் அரசியல் சாணக்கியம். எம்.எல்.ஏவா எந்த மயிராண்டியாவது வரட்டும். நம்ம கடம என்னான்னா மத்த வட்டத்துல நம்ம கட்சிக்கு விழுற வோட்டவிட நம்ம வட்டத்துல அதிக வோட்டு விழ வைக்கணும். அப்படி விழுந்திடுச்சின்னா... எப்படியாவது மாவட்டமாயிடுவேன். செண்பகா மாவட்ட மகளிரணி தலவி, நீ மாவட்ட இளைஞரணி தலவர் பாத்துக்கோன்னு சொல்லிட்டாரு. வட்டத்தோட அந்த வார்த்தகதான் மதிய இந்தப் போடு போட வைக்குது. பூத்துக்கு வெளிய நின்னுக்கிட்டு பெயரெழுதி நம்பர எழுதி சீட்ட கொடுத்துக்கிட்டே ஆட்டோக்காரங்கள எல்லாத் தெருவுக்கும் வெரட்டிக்கிட்டிருந்தாரு. வொவ்வொரு தெருவா போயி மதி கட்சியாளுக இன்னைக்குப் போறது, நாளைக்குப் போறது, நேத்தே போனதையெல்லாம் பீறாஞ்சி எழுப்பி உக்கார வைச்சி ஆட்டோவுல ஏத்திவிட்டானுக. வர்ற வழியெல்லாம் மதி கட்சி மத்த மாநிலத்துல செஞ்ச நல்லதையெல்லாம் சொல்லிக்கிட்டே வந்து எறக்கிவிட்டு வோட்டு போடச் சொல்லிக் கேட்க ஆட்டோகாரங்களுக்கு மதி உத்தரவு போட்டிருந்தாரு. ஆட்டோகாரனுக நேரா மதி கிட்ட வந்து ஆட்டோவ நிறுத்துவானுக, ஆட்டோகாரனும் வோட்டுக் கேட்பான், மதியும் கேட்பாரு. உழைப்பாளிகளோடு அரும தெரிஞ்சவரில்லையா மதி, மதியம் நாலு புரோட்டாவும் குருமாவும் ஆட்டோகாரங்களுக்கு வாங்கிக் கொடுக்கச் சொல்லியிருந்தாரு வட்டம். ஆனா மதி எல்லோருக்கும் எட்டு புரோட்டாவும் குருமாவும் வாங்கிக் கொடுத்தாரு. வர்ற வழியில பிரசாரம் செய்றதுக்கும் வட்டத்துக்குத் தெரியாம இருபது ரூபா தனியா தரேன்னும் சொல்லிப்புட்டாரு. ஆனா என்னன்னா எலெக்ஷன் முடியறதுக்கு அஞ்சு நிமிஷம் இருக்கிறப்பதான் தெரியுது ஆட்டோக்காரனுக எல்லோருமே கோதண்டன் ஆளுகன்னு. வர்ற வழியில எல்லாம் கோதண்டன் கட்சி வேட்பாளர் போட்டாவ பாக்கெட்டுல இருந்து எடுத்துக் காட்டி, அவருடைய அரும பெருமகள வாசிச்சி வோட்டுக் கேட்டிருக்கானுக. மதி கிட்ட வந்ததும் சும்மா மதி கட்சிக்கு வோட்டுக் கேட்டிருக்கானுக. மதி கட்சியின் உண்மயான விசுவாசி ஒருத்தன் ஆட்டோவுல வந்தப்பதான் உண்மயே தெரிய வந்துச்சு. வட்டமும் மதியும் கொதிச்சிப்புட்டாங்க. ஆட்டோகாரனுகளை எல்லாம் கூலியே கொடுக்காம வெரட்டி அடிச்சாங்க. திரும்பவும் மொட்டயன் எடுத்துக்கொடுத்தான், "எலிய விட்டுட்டு அம்ப எதுக்கு நோகணும்'. செண்பகாவும் கோதண்டன் பக்கம் சாயப்போறதா வொரு சேதி வந்துக்கிட்டிருந்தது. எலெக்ஷன் முடிஞ்சி எல்லாத்தயும் பாத்துக்கலாம்னு இருந்த வட்டத்துக்கு இதலாம் சேந்து கொலை வெறி வந்துச்சு. பயலுகள அழைச்சிட்டுப் போயி கோதண்டத்த தெருவுல ஓடவுட்டுப் வெட்டித் தள்ளிட்டு எல்லோருமா ஜெயிலுக்குப் போனாக. ஆனா எவன் நினைக்கிறதும்தான் எப்பவுமே நடக்காதே. மதி கட்சி அந்தத் தேர்தலுல ஜெளிப்புன்னா ஜெளிப்பு அப்டியொரு ஜெளிப்பு. ஆறே மாசத்துல வெளிய வந்துட்டாங்க. கொல செஞ்ச வீரங்க இல்லையா நெஞ்ச நிமித்திக்கிட்டுத்தான் செட்டு செட்டா எல்லா எடத்துக்கும் போனாங்க. எது வரைக்கும் அப்டிப் போக முடியும்? கோதண்டம் தம்பிக அழகா ஸ்கெட்ச் போட்டாங்க. முதல்ல வட்டத்தயும், ரெண்டாவது மொட்டையனையும் நடு ரோட்டுலேயே ஓட வுட்டு கண்டம்துண்டமாக்கினாங்க. வெளிய போறதயே மதி நிறுத்திட்டாரு. நாலஞ்சு பேரா வெரட்டி வந்து வெட்டுற கனவு வந்துக்கிட்டே இருந்தது. வொரு மொற கட்டையன் அவன் ஆள பாக்க போறதுக்கு மதியையும் கூப்பிட்டான். கடைசி வரை மதி மறுத்திருக்கலாம். ரெண்டு மூணு தெரு போறதுக்குள்ள சுத்துப்போட்டு வெரட்ட ஆரம்பிச்சானுக. கட்டையன் மாட்டிக்கிட்டான். சரமாரியா கத்திய எறக்குனானுங்க. "ஒக்காளவோழிகள உங்கள வெட்டாம விடமாட்டே'னு கைய ஓங்கிக்கிட்டு கட்டையன் எழுந்தான். ஓங்குன கையில கடைசி வெட்டு விழுந்துது. அதுக்கப்புறம் கட்டையன் சத்தம் வெளிய வரவே இல்ல. மதி திரும்பிப் பாக்கவே இல்ல. நேரா கோதண்டன் வீட்டுக்கு ஓடி வந்தாரு. கோதண்டன் வீட்டுல இருந்தவங்க எல்லாமே கொல பயத்துல நடுங்க ஆரம்பிச்சிட்டாங்க. வெட்ட வந்திருக்கான்னு அவுங்களுக்குத் தெளிவா தெரிஞ்சிருச்சு. யாரன்னு மட்டும் தெரியல. அததும் அங்கங்க தெறிச்சி ஓடப் பாக்குது. மதி நேரா ஓடி கோதண்டம் பொண்டாட்டி கால கெட்டியா பிடிச்சுக்கிட்டு, "மன்னிச்சிடுங்க அண்ணி. அண்ணன நான் கொல்லல. இனிமே நான் பாலிடிக்ஸ்லேயே இருக்கமாட்டேன். வுட்டுடச் சொல்லுங்க அண்ணி... வுட்டுடச் சொல்லுங்க அண்ணி..' ன்னு அழுதாரு. பயந்துபோன கோதண்டம்மாள் ஒத்தக் காலைத் தூக்கி மடக்கி அருள்பாலிக்கிறவர மதி அவ கால விடவே இல்ல.

1995-ல வொரு மொற மதி
----------------------------------
யான கட்டுற சங்கிலி கணக்கா கழுத்துல தங்கச் செயினும், மரப் பலக சைஸýக்கு கையில பிரேஸ்லெட்டும், மொறம் சைஸýக்கு நாலு மோதரமும், வெள்ள வேட்டி சட்டயும் இல்லாம மதி வெளிய வர மாட்டாரு. அதுதான் அவரோட இப்போதய ட்ரேட் மார்க், புரோக்கர் மார்க் எல்லாம். நடமாடும் தங்கமாளிகையா நடந்து வந்து, "ராசியான நம்பர் சார் 36. ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டு நம்பரும் 36தான் சார். சரி... அத வுடங்க இந்த ப்ளாட்ட பாருங்க நம்பர் 8. கருணாநிதி கோபாலபுரம் வீட்டு நம்பர் சார். இத வாங்குறீங்களா ராகவவீரா அவென்யூல உள்ள ரஜினிகாந்த வீட்டு நம்பர் 18'ன்னு ஆசக் காட்டுனாருன்னா அவரு நகை அடிக்கிற டாலுலேயே மயங்கிடுவாங்க. இவ்வளவு நகை போட்டிருக்காரு பணத்துக்கு ஏன் ஆசப்பட்டு பொய் சொல்லப் போறாருன்னு எது சொன்னாலும் ஒத்துப்பாங்க. "பகல்ல கொள்ள லாபம். இராவுல கொள்ளாத போத தாகம்'ன்னு ஜோரா போயிக்கிட்டிருந்த அவர் வாழ்க்கயில வொரு சேஞ்ச் வந்துது. அதுவும் அவரோட நடமாடும் தங்கமாளிகையாளதான். வொரு நா இராவு ஒன்பது மணிக்கு வனாந்தரமான பகுதியில தனியா போய்க்கிட்டிருந்தாரு. அந்தப் பகுதியிலிருந்து "உஸ்..உஸ்'ன்னு சத்தம் வரும்னு அவருக்குத் தெரியும். அன்னைக்கும் சத்தம் வந்துது. ரொம்ப நாளா மதிக்கு வொரு ஆச. அரவானிகளுட்ட போயி அவுளுகளுக்கு என்ன இருக்குன்னு பாக்கணும்னு. சரின்னு போயிட்டாரு. நாலைஞ்சு பேரு அங்க இருந்தாக. அதுல குண்டாயிருந்த ஒருத்திய செலக்ட் பண்ணிக்கிட்டு புதருக்குள்ள போயி வேட்டிய அவுத்துட்டு நின்னாரு. அவ வொண்ணும் செய்யாம மதி நகைகளயே பாத்துக்கிட்டு இருந்தா. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு மதி மொகத்துக்கு நேரா அவ மொகத்த கொண்டு போனா. அவ பவுடரு வாசனய இழுத்துக்கிட்டு மதி விறைச்சிக்கிட்டிருந்தாரு. திடீர்னு விநோதமா வொரு சத்தமெழுப்பினா. உடனே மத்த அரவானிகளும் ஓடிவந்தாக. மதிய அடிச்சி உதச்சி தரையில பொரட்டி, அவரு போட்டிருந்த எல்லா நகைகளயும் கழட்டிட்டு ஓடிட்டாங்க. மதிக்கு என்ன செய்யறதுன்னே தெரியல. வெளிய சொன்னா மானம் போயிடும்னு பயந்தாரு. அப்புறம் மானமா நகையான்னு யோசிச்சாரு. நகைதான்னு முடிவு பண்ணாரு. நேரா போலீஸýட்டு போயி சொன்னாரு. "கல்யாணத்த கட்டிக்கிட்டு எவளயாவது ஏறாம அவளுகக்கிட்ட ஏன்டா போன'ன்னு ஆரம்பிச்சு போலீஸýகாரங்க வாயில வந்ததையெல்லாம் வார்த்தயா காறித் துப்புனாங்க. அப்புறம் போலீஸýகாரங்களும் மதியும் வொரு வொப்பந்தம் போட்டாக. "நகைய புடிச்சிடலாம். அப்டி புடிச்சா பாதி...பாதி.' மதியும் வொத்துக்கிட்டாரு. மறு நா காலயில அரவானிக இருக்கிற ஏரியாவுக்கு மதிய போலீஸýகாரங்க அழைச்சிட்டுப் போனாக. இராவுல பாத்த முகத்த எடுத்து பலவிதமா ஆல்ட்ரேஷன் பண்ணி பாத்துக்கிட்டே வந்தாரு. வொல்லியா இருந்த அரவானிக எல்லாம் வொரே மாதிரியா இருந்தாக. அதனால குண்டா இருக்கிற அரவானிகளா பாத்து தேட ஆரம்பிச்சாரு. கடைசியா அவள கண்டும்பிடிச்சிட்டாரு. ஆனா அவள காட்டிக் கொடுக்கல. காட்டிக் கொடுக்கத்தான் போனாரு. அதுக்குள்ள அவ நீண்ட நாக்க நீட்டி "லூலூலூ'ன்னு வொரு சைக காட்டுனா பாருங்க. அதலு மதி சாஞ்சுப்புட்டாரு. அதலயும் "அப்புறமா வா எல்லாத்தயும் கொடுத்திர்றே'ன்னு சைக வேறு காட்டுனா. மதியும் யோசிச்சாரு. இப்ப காட்டிக் கொடுத்தா பாதிதான் கிடைக்கும்னுட்டு, "இங்க யாரும் இல்லை'ன்னு திரும்பி வந்துட்டாரு. மதியத்துக்கு மேல அரவானிக ஏரியாவுக்கு அவள தேடிப் போனாரு. பாதி கவரிங் நகையா இருந்துதுக்காக சில அரவானிக மதிய அடிக்க வந்தாக. மதிய சாஞ்சவங்கதான் காப்பாத்தினாங்க. அந்த நொடியிலிருந்து கனகாங்கிற அவுங்கள மதி உசுருக்குஉசுரா நேசிக்க ஆரம்பிச்சிட்டாரு. பிரேஸ்லெட்ட மட்டும் திருப்பிக் கொடுக்க முன்வந்தபோதுகூட வேணவே வேணாம்ன்னு திரும்பி வந்தவரு, கனகாவ பாக்க அடிக்கடி போனாரு. நாளுக்கு நாள் அவுங்க நேசம் கூடிக்கிட்டே போச்சு. ஊரு முழுக்க அந்தச் சேதி தெரிய வந்துச்சு. அவசரஅவசரமா மதிக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சாரு மதியோட அப்பா. கட்டுனா கனகாவதான் கட்டுவேன்னு மதி ரெட்ட கால்லயும் நின்னாரு. மதி சொல்ற எதயும் அப்பா காதுல போட்டுக்கவே இல்ல. உறவுக்காரப் பொண்ணு வொண்ண பாத்து கல்யாணத்துக்கான எல்லா ஏற்பாடும் செஞ்சாரு . கல்யாணத்தன்னிக்கு காலையில மதி வாயில குவார்ட்டர் குவார்ட்டரா வாங்கி ஊத்துனாங்க. போதையிலேயே மதி நீலவேணி கழுத்துல தாலி கட்டுனாரு. மாவட்ட மகளிரணித் தலவி செண்பகாதேவி வந்து வாள்த்திட்டு ஐநூத்தி வொண்ணு மொய்யி எழுத்திட்டு போனாங்க.

2005-ல வொரு மொற மதி
-------------------------------------
'எனக்கும் செண்பகாதேவிக்கும் உள்ள நெருக்கம் உங்க எல்லாருக்கும் தெரியும். வொரு ஃபோன் போட்டா போதும். பணத்த கொண்டு வந்து கொட்டிட்டுப் போயிடுவாங்க. ஆனா அது அவ்வளவு மரியாதயா இருக்காது. அதனாலதான் கேட்குல. உங்களுக்குச் சம்பளம் ரெண்டு மூணு மாசம் தராம இருக்கலாம். அதுக்காக தரவே மாட்டேன்லாம் சொல்ல வரல. பேங்ல போட்டா போல நெனச்சுங்க'ன்னு ரொம்ப உருக்கமா அரசியல் மீட்டிங்ல பேசுறா போல மதி பேசினாரு . அவரு எக்ஸ்போர்ட்ல வேல செஞ்ச பத்து பேரும் ரொம்ப நொந்து போயிட்டாங்க. தைக்க துணி வராததால எல்லோரும் மதியமே வீட்டுக்குப் போனாங்க. தனியா உக்காந்து, 'அந்தச் சக்களத்திய விட்டுட்டு வந்தாதான் இனி உங்கூட குடும்பம் நடத்துவே'ன்னு சொல்லிட்டு, ரெண்டு புள்ளைங்களயும் விட்டுட்டு நீலவேணி அவ அப்பா வூட்டுக்கே போனத பத்தி மதி கொஞ்ச நேரம் யோசிக்கிட்டே இருந்தாரு. கனகா வீட்டுக்கே போகலாம்னு எழுந்து எக்ஸ்போர்ட்ட பூட்டிட்டு வெளிய வந்தவரு நேரா அவரு வீட்டுக்கே போனாரு. மூணாம் வகுப்பு படிக்குற மூத்தவன் பள்ளிக்கொடத்துலேர்ந்து சீக்கிரமே வந்திருந்தான். ஏன்டா வந்துட்டேன்னாரு. வாத்தியார் செத்துட்டாருன்னான். பெல்ட உருவுன மதி பையன் தோல உரிச்சாரு.
நன்றி : உயிரோசை

No comments: