வெண்தாடி வைத்திருப்பவர்களைப் பார்க்கிறபோது, ஒன்றாம் வகுப்பிலோ, இரண்டாம் வகுப்பிலோ படித்த கவிஞர் தம்பி சீனிவாசனின் 'காட்டுப்பாக்கம் தாத்தாவுக்கு காடுபோல தாடியாம். மாடி மேலே நிற்கும்போதும் தாடி மண்ணில் புரளுமாம்' என்ற பாடலை என் நினைவுகள் பாடும். குருவிகள் கூடு கட்டியிருக்க, தரை புரளும் தாடியுடன் காட்டுப்பாக்கம் தாத்தா வரையப்பட்டிருப்பார். (ஓவியர் பெயர் தெரியவில்லை - மன்னிக்கவும்) அந்த ஓவியத்தோடும் அந்தப் பாடலோடும் கவிஞர் ராஜமார்த்தாண்டனையும் ஒப்புமைப்படுத்தி அவ்வப்போது பார்த்திருக்கிறேன். ராஜமார்த்தாண்டனின் கண்கள் எல்லோரையும் விட அசல் அந்த ஓவியமாகவே அவரைக் காட்டும். தாடியில் கூடு கட்டிய குருவிகளுக்குப் பதில் அவருடைய கவிதைகளை வைத்து என் கற்பனை வரைகோடுகள் நீண்டிருக்கின்றன.
ராஜமார்த்தாண்டன் பெயரை 97-ம் ஆண்டின் இறுதி மாதங்களில்தான் முதன்முதலாகக் கேள்விப்பட்டேன். துரை என அழைக்கப்படும் கவிஞர் வித்யாஷங்கர் ஆசிரியராக இருந்த "ராஜரிஷி' அரசியல் வார இதழில் அப்போது பணியாற்றிக்கொண்டிருந்தேன். அந்நாள்களில் தினமணி கதிரில் வெளியான கவிதைகள் முக்கியத்துவம் கொடுத்துக் கவனிக்கப்பட்டன. அக் கவிதைகளைத் தேர்வு செய்பவர் ராஜமார்த்தாண்டன் என்பதை அறிந்திருந்தேன். அதன் காரணமாகவும், அவர் பெயர் வெளிப்படுத்துகிற கம்பீரத்தின் காரணமாகவும் இயல்பாகவே அவரைப் பார்க்காமலேயே அவர் மீது பயம் கலந்த மரியாதை எனக்குள் வந்திருந்தது. அப்போது அவருடைய ஒன்றிரண்டு கவிதைகளை மட்டுமே படித்திருந்தேன். மாதம் போகப்போக "பயம் கலந்த அந்த மரியாதை' மனவோரம் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க, ராஜமார்த்தாண்டன் மீது கொஞ்சம் எனக்கு வருத்தம் ஏற்பட்டது. இப்போது அவமானமாகக் கருதும் அப்போதிருந்த அந்தக் கோபம் கலந்த வருத்தத்திற்கு இருந்த பெரிய காரணம் என் கவிதைகளை வெளியிடவில்லை என்பதுதான். தொய்வில்லாமல் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருப்பேன். பிரசுரமானதே இல்லை. மாறாக , யூமா வாசுகியின் கவிதைகள் இரு வாரங்களுக்கொரு முறையோ, மூன்று வாரங்களுக்கொரு முறையோ தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தது. யூமா வாசுகி மீதும் விடலை மன இயலாமை ஏற்படுத்திய வெகாமை இருந்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் , தலைபிரட்டையைப் பிடித்துவிட்டு மீன்குஞ்சுகளைப் பிடித்ததாய் சந்தோஷப்படும் சிறுவர்கள்போல் ஆத்திர வரிகளால் கவிதை எனக் கட்டமைக்கப்படுகின்ற ஒன்றைத்தான் அப்போது தூங்காமல் பல இரவுகளில் செய்துகொண்டிருந்திருக்கிறேன். இத்தெளிவு 2003-ல் "பூமத்திய வேர்கள்' என்ற தலைப்பில் என் முதல் தொகுப்பை வெளியிட்டதற்குப் பின்னர்தான் ஏற்பட்டது. இதற்குப் பின்னர் கவிதை எழுதுகிறேன் என்று வெளியில் சொல்லவே எனக்குப் பயமாக இருந்தது. ராஜமார்த்தாண்டனிடம் இன்னும் அதிகம் பயப்பட வேண்டிய சூழல் எனக்கு ஏற்பட்டது.
வெவ்வேறு பத்திரிகைகளில் பணியாற்றிவிட்டு 2005-ல் தினமணியில் அதுவும் தினமணி கதிர் இதழில் பணியாற்ற சேர்ந்தேன். ராஜமார்த்தாண்டன் கலக்கம் அதிகரித்தது. திட்டமிடத்தொடங்கினேன். கவிதை, கவிதை சார்ந்த எதையும் பேசுவதில்லை என்கிற முன் தீர்மானத்தோடுதான் அலுவலகத்தில் நுழைந்தேன். ஆனால் சூழலின் மறுபக்க எழுத்துகள் வேறு வகையாக இருந்தன. ராஜமார்த்தாண்டன் பணியிலிருந்து விடுவித்துக் கொள்வதற்குக் கடிதம் கொடுத்துவிட்டு, கடைசி இரு தினங்கள் மட்டும் வந்து போய்க்கொண்டிருந்தார். அவர் விலகலால் காலியான இடத்தை (பத்திரிகையில்) நிரப்பும் முயற்சியிலேயே நானும் சேர்க்கப்பட்டிருந்தேன். முதன்முதலாய் பார்த்தபோது ராஜமார்த்தாண்டன் பெயருக்கேற்ப நான் எழுப்பியிருந்த கற்பனை சரீரம் பொலபொலத்து இறங்கி, காட்டுப்பாக்கம் தாத்தா எனக்குள் வந்தார். அறிமுகம் செய்துகொள்ள என்னிடம் அப்போதும் ஏதும் இல்லாததால் திரையரங்கத்திற்கும் ஆசிரியர் வந்துவிட பதற்றத்தோடு படம் பார்க்கும் மாணவன் போல அவருக்கே தெரியாமல் அவரைப் பார்ப்பதும், அவர் பார்க்கிறபோது திரும்பிக் கொள்வதுமாகவே கடத்தினேன். பழுப்பேறிய வெள்ளை வேட்டி சட்டை, ரப்பர் செருப்பு, தாடி என அலுவலக இயல்புக்கு முற்றிலும் அந்நியப்பட்டு இருந்தார். காற்றைப்போல கதவு திறந்து நுழைந்தார். காற்றைப் போல இருக்கையில் அமர்ந்தார். காற்றைப்போல காகிதங்களைப் புரட்டினார். காற்று ஓரிடத்தில் நிற்காது என்பதுபோல சட்டென கதவு திறந்து வெளியில்போய் நண்பர்களைப் பார்ப்பதும் வருவதுமாகவே இருந்தார். அலுவலகத்தின் எல்லாப் பிரிவுகளிலும் அவருக்கு நண்பர்கள் இருந்தனர். அலுவலகத்தை விட்டுப் போன பிறகும்கூட நண்பர்களைப் பார்ப்பதற்காகவே பலமுறை வந்திருக்கிறார். நண்பர்கள் மீது அவருக்கு எவ்வளவு பிடிப்பு என்பதற்கு அலுவலகத்தாரால் சொல்லப்படும் ஒரு நிகழ்வு; பலமுறை நடந்துள்ளது: சொல்லாமல் திடுமென விடுப்பு எடுத்துவிடுவாராம். "இப்படி எடுக்கலாமா?' என்று கேட்டால், "ப்ரெண்ட்ஸ் வந்துட்டாங்க இங்றேன் புரிஞ்சுக்கமாட்டேங்கிறீங்களே..' என்பதாகவே இருந்திருக்கிறது.
படைப்பாளி என்பவன் புறவெளியில் பயணிக்கும் அதே நேரம் அகவெளியில் ஆழ்ந்து பல மைல் தூரம் பயணிப்பவனாக இருக்கிறான். அவனுக்குப் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. அவனைப் புரிந்துகொள்ளுதல் என்பது இயலாத ஒன்று. ஒரு படைப்பாளிகூட மற்றொரு படைப்பாளியின் பயணத் திசைகளைக் கண்டறிதல் என்பது இயலாதது. அப்படியிருக்கையில், அலுவலகத்தின் கட்டுப்பாடுகள் பிரசவிக்க இடம் தேடும் பூனைகள்போல அவனை ஓயாமல் அலையவிடுகிறது. சொந்த சூழல் சரியாக இருக்குமானால் அவன் அனைத்தையும் உதறிவிடுவான். அலுவலகம் மட்டுமல்ல; தன் சொந்த வாழ்க்கையிலான விஷயங்களில்கூட அநியாயத்திற்குச் சறுக்கிக் கொள்ளக் கூடியவனாக இருக்கிறான். ராஜமார்த்தாண்டன் மட்டும் இதில் விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன? விடுவித்துக்கொண்டு, பலமுறை அலுவலகம் வந்து போய்க்கொண்டிருந்தவருக்கு மூன்று வருடங்கள் கழித்துத்தான், அலுவலகத்தின் ஆதாரத்துடன் அவர் கேட்டுப் பெற வேண்டிய மாதாந்திர தொகையின் நினைவோ அல்லது தெரியவோ வருகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் அளிக்கப்படும் ஓய்வூதியம் அது. அலுவலகத்தை விட்டு விலகுகிற அன்றே ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கத் திட்டமிட்டுவிடுவார்கள். ஆனால், மூன்று வருடங்கள் கழித்து விண்ணப்பிக்க ராஜமார்த்தாண்டன் வந்தபோது எல்லோருக்கும் ஆச்சர்யம். "இவ்வளவு நாளா வாங்கலையா... இவ்வளவு நாளா வாங்கலையா' என அவரைக் குடைந்தெடுத்தனர். கேட்ட எல்லோருக்கும் மெüனத்தையே அவர் பதிலாக அளித்துக் கொண்டிருந்தார். ராஜமார்த்தாண்டனைப் பார்க்க யூமா வாசுகி அன்று மாலை வந்திருந்தார். அவருக்கும் ஆச்சர்யம். "நீங்கள் மகா கவியாகிவிட்டீர்கள்' என்று இரண்டு மூன்று தடவை கேலியாகச் சொன்னார். இந்தக் காலகட்டங்களில் ராஜமார்த்தாண்டன் மீதான பயம் காணாமல் போய்விட்டாலும் அதிகம் பேசாமலேயே இருந்து வந்தேன். உடனிருந்த நானும் தமிழ்மகனும் சிரித்தோம். ராஜமார்த்தாண்டன் மெüனமாகவே வந்தார். இதன்பிறகு தமிழ்மகன்தான் ஓய்வூதியத்தைப் பெற்றுத் தருவதற்கான முயற்சிகளில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திற்குப் போய் வந்துகொண்டிருந்தார்.
மெüனத்தைக் கைவசப்படுத்திக் கொள்வது ஓர் அரிய கலை. வெளிப்படுகிற வார்த்தைகளைவிட மெüனங்கள் அதிகம் பேசும். அந்தக் கலையில் ஆழ்ந்தவராக இருந்தார் அவர். பல பேச்சுகளில் அதைக் கவனித்திருக்கிறேன். ராஜமார்த்தாண்டன் அறுபதாவது வயதையொட்டி 'உயிர் எழுத்து' ஆகஸ்ட் மாத 2008 இதழை அவரின் சிறப்பிதழாக வெளியிட்டிருந்தது. அதில் என்னுடைய 'இருட்டாழி' சிறுகதையும் வெளியாகி இருந்தது. எனக்கது இனம்புரிந்த மகிழ் சலனத்தை ஏற்படுத்தவே செய்தது. சுகுமாரன், ந.முருகேச பாண்டியன், சுரேஷ்குமார் இந்திரஜித், கரிகாலன், சிபிச்செல்வன், காலச்சுவடு கண்ணன் ஆகியோர் ராஜமார்த்தாண்டன் குறித்து கட்டுரை எழுதியிருந்தார்கள். இதில் சிபிச்செல்வன் கட்டுரையில் மட்டும் நான் உணராத ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
'ராஜமார்த்தாண்டன் கவிதைகளில் பசுவய்யா, யூமாவாசுகி ஆகிய கவிகளின் பாதிப்பு இருப்பதைப் பல கவிதைகள் காட்டுவதைப்போலவே, அவருக்குப் பிடித்த புதுமைப்பித்தனின் சில கவிதைகளின் பாதிப்பையும் பார்க்க முடிகிறது' என்று சிபிச்செல்வன் எழுதியிருந்தார்.
பேராற்று பிரவாகமாய்ப் பெருக்கெடுத்து பாயக்கூடியவை யூமாவாசுகியின் கவிதை மொழி. வழியினூடே பல குன்றுகள், நறுமணத் தோட்டங்களைக் கடக்கும். இதிலிருந்து மாறானவை ராஜமார்த்தாண்டனுடைய கவிதை மொழி. இடைஇடையே கெண்டைகள் துள்ள சலசலத்து ஓடக்கூடிய ஓடையைப் போன்றது. இதழ் தொடர்பாக சுதீர் செந்திலிடம் தொலைபேசியில் பேசியபோது, 'இதழ் சிறப்பாக வந்திருக்கிறது என்றும், சிபிச்செல்வன் எழுதியிருப்பதுபோன்று மட்டும் என்னால் உணர முடியவில்லை' என்று தெரிவித்தேன். அதற்கடுத்ததொரு நாளில் யூமா வாசுகியிடமும் இதைப் பகிர்ந்துகொண்டேன். அவரும் திடமாக மறுத்து பாதிப்பை உணரவில்லை என்றே சொன்னார். ராஜமார்த்தாண்டன் இதற்கு ஏதாவது எதிர்வினையாற்றுகிறாரா என்பதைத் தெரிந்துகொள்ளவே அடுத்த செப்டம்பர் மாத உயிர் எழுத்து இதழை அதிக ஆவலுடன் பார்த்தேன். நன்றி தெரிவித்து ராஜமார்த்தாண்டன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தின் ஒரு பகுதி:
'பாராட்டுவதில் இரண்டு வகை உண்டு. முதல் வகை, நிறைகளை மட்டுமே குறிப்பிட்டு பாராட்டுவது. இன்னொரு வகை, நிறைகளையும் குறைகளையும் மதிப்பிட்டு விமர்சனபூர்வமாகப் பாராட்டுவது. இரண்டாவது வகையே, பாராட்டப்படுபவனுக்குப் பயன்தரக் கூடியது என்று கருதுகிறவன் நான். ஓர் எழுத்தாளன் இறந்த பிறகு எழுதப்படும் அஞ்சலிக் கட்டுரைகளால் அவனளவில் அவனுக்குப் எந்தப் பயனும் இல்லை. வாழும்போதே அவன் எழுத்துக்கள் உரிய முறையில் விமர்சனத்துக்குள்ளாக்கப்படுவதே, அவன் தன்னை சுய பரிசீலனை செய்து கொள்ளவும் மேலும் தீவிரமாகச் செயல்படவும் தூண்டுதலாக அமையும்.'
எல்லாப் படைப்பாளிகளுக்கும் இத்தெளிவு இருக்கும் என்று சொல்லமுடியாது. சிபிச்செல்வன் குறிப்பிட்டதையும் கவனத்தில் கொண்டு தீவிரமாகச் செயல்பட அவர் நினைத்திருக்கலாம். அதே கடிதத்தில் 'ஓர் எழுத்தாளன் இறந்தபிறகு எழுதப்படும் அஞ்சலிக் கட்டுரைகளால் அவனளவில் எந்தப் பயனும் இல்லை' என்று எழுதியிருந்தார். ஆனால், உண்மையில் இவ்வளவு விரைவில் அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டியிருக்கும் என்று யாரும் நினைக்கவில்லை.
மறைவதற்கு நாலைந்து நாள்களுக்கு முன்பு தினமணி அலுவலகத்திற்கு வந்திருந்தார். அதே ஓய்வூதிய விவகாரம். தேதி குறிப்பிட்டதில் தவறென்பதால் ஓய்வூதியம் பெறுவதில் தாமதம். எல்லோரையும் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். இந்த முறைதான் அவரிடம் சற்று அதிகம் பேசிக் கொண்டிருந்தேன். தமிழ்மகன் மூலம் என்னுடைய ஐந்து கவிதைகளை காலச்சுவடு இதழுக்கு அவரிடம் கொடுத்திருந்தேன். அதில் மூன்று கவிதைகளைத் தேர்வு செய்து கொடுத்திருப்பதாகச் சொல்லியிருந்தார். அது எட்டு ஒன்பது மாதங்களுக்கு மேலாகியும் பிரசுரமாகவில்லை. இதைத்தான் கேட்கப் போகிறேனோ என்று அவருக்குப் பேசுவதற்கு முதலில் சிறு தயக்கம் இருந்தது. எனக்குப் பேசுவதற்கு வேறு விஷயங்கள் இருந்தன.
'காலச்சுவடு பெண் படைப்பாளிகள்' தொகுப்பை ராஜமார்த்தாண்டன் தொகுத்து இருந்தார். இதில் காலச்சுவடு மே-2004 இதழில் என் மனைவி பெயரில் (அ.அருந்ததி) நான் எழுதியிருந்த 'இன்னொன்றிலான உலகு' என்ற தலைப்பிலான கவிதையும் தொகுக்கப்பட்டிருந்தது. பெண்கள் பேருந்தில் திருட்டுத்தனமாய் ஏறி அமர்ந்திருக்கும் ஆணைப்போல அப்புத்தகத்தில் என் கவிதை திருதிருவென முழித்துக் கொண்டிருக்கிறது. அடுத்த பதிப்பில் இதை நீக்கிவிடும்படி கேட்டுக்கொண்டேன். 'இந்தப் பிரச்சினைக்காகவே சந்தேகம் வந்த அனைவருக்கும் கடிதம் எழுதிக் கேட்டோம். அருந்ததி என்ற பெயரில் ஈழத்துக் கவிஞர் ஒருவர் இருக்கிறார். அவர் என்று நினைத்து இணைத்துவிட்டேன். இதில் இன்ஷியல் இருப்பதைக் கவனிக்கவில்லை' என்று சொன்னார். பெயரை மாற்றிமாற்றி எழுதுவதால் இப்படியொரு பிரச்னை வரும் நானும் கருதியதில்லை. அதற்கடுத்து பேச்சுகள் மாறி, 'கவிதையில் ஏதாவது சந்தேகம் என்றால் சுகுமாரனிடம் கேட்பேன்; ஒரு கவிதை தொகுப்பு கொண்டு வரவேண்டும்; 'புதுக்கவிதை வரலாறு' நூலை மறுபதிப்பு செய்ய வேண்டும்' என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். அவருடன் நெடுநாளாய் பழகிய மாலை சங்கம நண்பர்கள் திரண்டுக் கொண்டிருந்தார்கள். அவர் கவனம் அவர்கள் பால் ஈர்க்கப்பட்டது. எல்லோரிடம் விடைபெற்றார். அதுதான் இறுதியான விடைபெறல் எனத் தெரியாமலேயே கையசைத்தோம். முத்தையா வெள்ளையன் அவர் இறப்புச் செய்தியைச் சொன்னபோது தாங்க முடியவில்லை. துடித்துவிட்டேன். அலுவலகமே சோகத்தால் உறைந்துபோனது. துக்கத்தைத் தாங்கமுடியாமல் எல்லோர் நாவும் திரும்பத்திரும்ப ஒன்றையே சொல்லிக் கொண்டிருந்தது. 'சொல்லிட்டுப் போவதுபோல வந்தார். கடைசி வரை ஓய்வூதியத்தை வாங்கிப் பார்க்கவே இல்லை'.
ராஜமார்த்தாண்டனின் பல கவிதைகள் என்னை மீண்டும் கவிதைக் காடுகளில் பயணிக்க உதவியிருக்கின்றன. 'வால் மனிதன்' என்றொரு அவர் கவிதை. /இப்போதெல்லாம் அவனுடன் ஒரு வால்/ ஏதேனுமொரு வால்/ சிலபோது குரங்கின் வால்/ சிலபோது சிங்கத்தின் வால்/ சிலபோது நரியின் வால்/ சிலபோது குதிரையின் வால்/ சிலபோது எலியின் வால்/ சிலபோது ஆட்டின் வால்/ சிலபோது பன்றியின் வால்/ என்றிப்படி எப்போதும்/ ஏதேனுமொரு வால்/ ஒரு வால் மறைந்த கணம்/ ஒட்டிக்கொள்ளும் இன்னொரு வால்/ விரைவாக/ இப்போதெல்லாம் அரிதாகி வருகின்றன/வாலில்லாமல் அவன்/ நடமாடும் கணங்கள்/ என்று முடியும் அந்தக் கவிதை. பல நண்பர்களிடம் சிலாகித்து இந்தக் கவிதையைச் சொல்லியிருக்கிறேன். ஆனால் அவரைச் சந்தித்த காலங்களில் அவரிடம் அவர் கவிதை குறித்து ஒரு சொற்கள்கூட உதிர்த்ததில்லை.
'என் கையில் இருந்த பரிசைப் பிரிக்கவில்லை. பிரித்தால் மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும்போல் இருக்கிறது' என்று தேவதச்சன் அவருடைய "பரிசு' கவிதையில் எழுதியிருப்பார். அந்த வரிகளை நான் பின்பற்றியிருக்கிறேன். பல கவிஞர்களிடம் அவர் கவிதைகள் பிடித்திருந்தாலும் அது பற்றி பேசாமலேயே இருந்திருக்கிறேன். அதைப்போல்தான் ராஜமார்தாண்டனிடமும் இருந்தேன். அப்படி உயிர்ப்பித்துச் சொல்லாத அந்தச் சொற்கள் இப்போது என்னைக் குற்றவாளியாக்கி வதைக்கிறது.
நன்றி: `புதிய புத்தகம் பேசுது'
5 comments:
iam durai@ vidyashankar.really touch me. weare spent many drunkan nights inhis room. ihave nothing to say......
அன்பு அரவிந்தன், இதை வாசித்து முடித்ததும் மனம் அளவிலாத கனம் நிரம்பியதாயிற்று. அவருடனான உங்கள் மௌனங்கள்,மௌனமான கவிதை நிமிடங்கள் அப்படியே என் மனதில் தைத்து விட்டது.என்னையறியாமல் என் கண்களில் நீர் சுரந்து கொண்டிருக்கிறது.
//துக்கத்தைத் தாங்கமுடியாமல் எல்லோர் நாவும் திரும்பத்திரும்ப ஒன்றையே சொல்லிக் கொண்டிருந்தது. 'சொல்லிட்டுப் போவதுபோல வந்தார்//
இந்த வரிகள் என்னை மேலும் உடையச் செய்துவிட்டது.
துரை சார் நன்றி. எப்படி இருக்கீங்க யாத்ரா உங்கள் பகிர்வுக்கும் நன்றி.
யூமா வாசுகி - புத்தகம் பேசுது இதழில் படித்துவிட்டு பேசினார். 'மகா கவியாகிவிட்டீர்கள்' என்று கேலியாக இரண்டு மூன்று தடவை சொன்னார்'- என்று எழுதியதில் அவருக்கு வருத்தம். "ராஜமார்த்தாண்டனைக் கேலி செய்யும் தகுதி தனக்கு இல்லை என்றும், சந்தோஷமாகவே மகா கவி என்று சொன்னதாகவும், அதைப்போல தானும் சில நேரங்களில் தவறியிருப்பதாகவும் தெரிவித்தார்.''
புண்படுத்தியிருந்தால் மன்னிக்குமாறும் அவரிடம் கேட்டுக்கொண்டேன்
visit saamakodai.blogspot.com-durai
Post a Comment