Saturday, January 5, 2008

ஒரே பஞ்ச்!




"கோபம் வந்துவிட்டால் என்னுடைய அண்ணன் தம்பிகளுக்குள் வித்தியாசமாகச் சண்டை நடக்கும். கண்டவாறு அடித்துக் கொள்ளமாட்டார்கள். கிளவுஸ் எடுத்து மாட்டிக் கொண்டு பாக்ஸிங் போடுவார்கள்'' என்று சிரித்துக் கொண்டே சொல்லும் பர்வீனும் குத்துச்சண்டை வீராங்கனை. இவரின் அண்ணன் கலிம் அஹமது, தம்பிகள் ரஹ்மான், கமால் பாஷா ஆகியோரும் தேசிய அளவில் சாதித்து வரும் குத்துச் சண்டை வீரர்கள். இவர்கள் எல்லோரும் தேசிய அளவில் குத்துச்சண்டைக்காக வாங்கிய விருதுகள் சென்னை தங்க சாலையில் உள்ள இவர்களது வீட்டில் நிறைந்து இருக்கின்றன.
"வீட்டில் எல்லோருமே பாக்ஸர்களாக இருந்தாலும் நான்தான் பெஸ்ட். இப்படிச் சொல்வதால் அண்ணன் தம்பிகள் யாரும் குத்துச்சண்டை போட வரமாட்டார்கள். ஏனென்றால் தேசிய அளவிலான போட்டி ஒன்றில் தமிழகம் சார்பில் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்க அண்ணனும், தம்பியும் நானும் தேர்வானோம். இது பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. குடும்பமே கிளம்பி வந்துவிட்டீர்களா? என்றெல்லாம் கேட்டார்கள். போட்டியின் முடிவில் நான் மட்டுமே வெற்றி பெற்று வெண்கலம் பரிசு வாங்கி வந்தேன்'' எனும் பர்வீனிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவரின் நாக்-அவுட் பதில்களும்:

அழகு போய்விடும் என்று பயந்துகொண்டு பெரியளவில் பெண்கள் பங்கேற்காத குத்துச்சண்டை போட்டிக்கு வர உங்கள் அண்ணன், தம்பிகள்தான் காரணமா?
உண்மைதான். என்னுடைய அப்பா ரயில்வேயில் வெல்டராக வேலை பார்க்கிறார். அவர் வெயிட் லிஃப்டர். அவர் கொடுக்கிற ஊக்கம்தான் நாங்கள் இப்படி உடல்ரீதியான போட்டியில் ஆதிக்கம் செலுத்துவதற்குக் காரணம். 99-ஆம் ஆண்டு நான் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கத் தொடங்கினேன். நான் தொடங்கியபோது தமிழ்நாட்டில் ஒரு சில வீராங்கனைகளே இருந்தனர். அப்போது நானும் முழுமையாகப் பயிற்சி எதுவும் பெற்றிருக்கவும் இல்லை. அறிமுகப் போட்டி ஒன்றில் அப்பா ஸ்டேஜில் ஏற்றியபோது எதிரிலிருந்த பெண் என்னை நையப் புடைத்துவிட்டார். அந்த அடிக்குப் பிறகு இனி யாரிடமும் இப்படி அடி வாங்கக்கூடாது என்று முடிவெடுத்தேன். பயிற்சியும் பெறத் தொடங்கினேன். அதற்குப் பிறகு அடி வாங்குவது இல்லை. இப்போது அடி கொடுத்துக் கொண்டிருக்கிறேன். அழகு போய்விடும், முகம் பெயர்ந்துவிடும் என்பதெல்லாம் பொய் என்றே எனக்குத் தோன்றுகிறது. பயிற்சி பெறாத ஒருவர் முகத்தில் அடிபடுகிற போதுதான் முகம் கிழிந்து போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அடிபடுகிறளவுக்கு பயிற்சி பெற்ற யாரும் முகத்தைக் காட்டிக்கொண்டிருக்க மாட்டார்கள்.

உங்கள் பயிற்சியாளர்கள்?
முதலில் மதிவண்ணன் என்பவரிடம் பயிற்சி பெற்றேன். அவர் தேசிய வீரர். இப்போது குமார் என்பவரிடம் பயிற்சி பெற்று வருகிறேன். உலகத்தர வீரர்களுக்குக் கொடுப்பது போன்ற பயிற்சியை எனக்குக் கொடுத்து வருகிறார். தடுக்கவேண்டிய கட்டம் எது? தாக்க வேண்டிய கட்டம் எது? எதிரில் உள்ளவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு தாக்குவது எப்படி என்பது பற்றியெல்லாம் சொல்லிக்கொடுக்கிறார். இதைப்போல கருணாகரன் என்பவரும் பல்வேறு நுட்பங்களைச் சொல்லிக் கொடுக்கிறார்.

ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் பயிற்சி பெறுகிறீர்கள்?
காலை ஆறு மணியிலிருந்து எட்டு மணி வரையும் மாலை நாலரை மணியிலிருந்து ஆறரை மணி வரையும் பயிற்சி பெறுகிறேன். உடல் பலம்தான் குத்துச்சண்டைக்குப் பிரதானம் என்பதால், தங்க சாலையில் இருந்து மெரீனா கடற்கரை வரை ஓடுவோம். வெயிட் லிஃப்ட் பயிற்சி செய்வோம். மணல் பையைக் குத்திப் பயிற்சி எடுப்போம். எங்களுக்குள்ளாகவே பயிற்சி போட்டிகள் நடத்திக் கொள்ளுவோம். இதில் சிலநேரம் ஆண்களோடும் மோதுவோம்.

ஆண்களோடு பெண்களால் மோதமுடியுமா?
முடியாது என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். என்னைக் கேட்டால் ஆண்களைவிட பெண்கள்தான் பாக்ஸிங்கில் பலம் வாய்ந்தவர்கள் என்பேன். பஞ்ச் செய்வதில் பெண்களே பலம் வாய்ந்தவர்கள். மன அளவில் ஆண்களைவிட பெண்கள் பலம் வாய்ந்தவர்களாக இருப்பது போன்றுதான் இது. பயிற்சி போட்டிகளில் நாங்கள் பல ஆண் வீரர்களைத் தோற்கடித்து இருக்கிறோம்.

முதலில் தடுப்பாட்டம் ஆடி எதிரில் விளையாடுகிறவர் பலமிழந்துவிட்டார் என்று தெரிகிறபோது அதிரடி ஆட்டம் ஆடக்கூடியவர் முகமது அலி. உங்கள் நுட்பம் என்ன?
முகமது அலிதான் என்னுடைய ஹீரோ. அழகாக, நேர்த்தியாக மோதக்கூடியவர். எல்லாக் கட்டங்களிலும் கூலாகவே விளையாடிக்கொண்டிருப்பார். இந்த ஆட்டம்தான் எனக்குப் பிடிக்கும் என்றாலும், எதிரில் உள்ளவர்களின் நிலைக்கேற்பவும் என்னுடைய உடல்நிலைக்கேற்பவும்தான் முடிவெடுப்பேன். உடல் ஒத்துழைக்கக்கூடிய நிலையில் இருந்தால் எடுத்தவுடனே அதிரடியாகத் தாக்கத் தொடங்கி விடுவேன். அதேநேரம் டைசன்போல் விளையாட மாட்டேன். அவர் எந்த விதியையும் கடைபிடிக்க மாட்டார். ரிங்கிற்குள் வந்ததும் கண்மண் தெரியாமல் தாக்கத் தொடங்கி விடுவார். இதில் எதிரிகள் நிலைகுலைந்து எப்போது ரிங்கை விட்டு இறங்கலாம் என்று இருப்பார்கள். அதுபோன்ற ஆட்டம் எனக்குப் பிடிப்பதில்லை.

அதிரடித் தாக்குதல் யார் மீதும் நீங்கள் தொடுத்ததில்லையா?
திட்டமிட்டுத் தாக்கியது இல்லை. உத்தரப்பிரதேசத்தில் நடந்த ஒரு போட்டியில் ஒரு பெண்ணின் மீது பல்வேறு பஞ்ச்களைப் பதித்துவிட்டேன். அந்தப் பெண் பொத்பொத்தென்று விழுந்துகொண்டிருந்து. அந்தப் பெண்ணினுடைய கோச் என்னிடம் வந்து பச்சைக் குழந்தையை ஏம்மா இப்படி அடிக்கிற என்று சொன்னார். ரிங்கிற்குள் வந்தால் அதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று சொல்லிவிட்டேன்.
உங்கள் உடம்பைப் பார்க்கிறபோது குத்துச் சண்டை போடுகிற உடம்பாகத் தெரியவில்லையே?
குண்டாக இருப்பவர்கள்தான் பாக்ஸிங் செய்பவர்கள் என்று அர்த்தமில்லை. முன்பு 42 கிலோ பிரிவில் கலந்துகொண்டிருந்தேன். இப்போது 52 கிலோ பிரிவில் கலந்துகொள்கிறேன். 52 கிலோவின் பலத்தையும் கைகளில் கொண்டு வந்து தாக்கத் தெரிந்தால் போதும். குண்டாக இருக்கவேண்டிய அவசியமில்லை.

வாங்கிய விருதுகள்?
தேசிய அளவில் சீனியர் பிரிவில் வெள்ளி, வெண்கலம் என்று ஏழு பதக்கங்கள் பெற்றிருக்கிறேன். இவையில்லாமல் மாநில அளவிலான போட்டிகள், மண்டல அளவிலான போட்டிகள் என்று பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறேன். சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும் ஒலிம்பிக்கில் பதக்கம் பெறவேண்டும் என்பது என் ஆசை. இந்த ஆசைகள் நிறைவேற எனக்கு மனபலத்தைவிட பணப் பலம் தேவை. அதற்கு முதலில் ஓர் அரசாங்க வேலை தேவை என்று நினைக்கிறேன்.

No comments: